சிக்கு புக்கு - விமர்சனம்

நிறைவேறாதஅப்பாவின் காதலும், நிறைவேறிடும் பிள்ளையின் காதலும் தான் "சிக்குபுக்கு"! மறைந்த ஒளிப்பதிவாளர் - இயக்குநர் ஜீவாவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்து, அவரது திடீர் மறைவுக்குப் பிறகு "தாம்தூம்" படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்த கே.மணிகண்டனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அடுத்தபடம் தான் சிக்குபுக்கு என்பது கூடுதல் சிறப்பு.


லண்டன் வாழ் இந்தியர்களான ஆர்யாவும் ஸ்ரேயாவும் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரே சமயத்தில் சொந்த ஊரான காரைக்குடிக்கும் மதுரைக்கும் வருவதற்காக ஒரே விமானத்தில் பெங்களூரு வந்தடைகின்றனர்.


லண்டனிலும், விமானத்திலும் சந்தித்து கொள்ளாத இவர்கள், விமான ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ஒரே ரயிலில் கணவன்-மனைவியாக பயணிக்க வேண்டிய நிலை. ரயில் பயணத்திற்காக வேறு ஒரு தம்பதியின் பெயரில் பொய்யாக கணவன்-மனைவி ஆன இந்த ஜோடி நிஜத்தில் சேர்ந்ததா? இல்லையா? என்பது தான் க்ளைமாக்ஸ்!


இதனிடையே ஆர்யாவின் அப்பாவின் (அவரும் ஆர்யா தான்) காதல் சுவடுகளையும் பயணிக்க செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியிருப்பதுடன் விமான பயணம், ரயில் பயணம் போதாதென்று நடைபயணம்,சைக்கிள் பயணம், கார் பயணம், லாரி பயணம், பேருந்து பயணம் என்று ஆர்யாவையும் ஸ்ரேயாவையும் படம் முழுக்க பயணிகளாக்கி காதல் பயணம் சென்றிருப்பதுதான் சிக்குபுக்குவின் ஹைலைட்!


அந்த காலத்தில் வாழ்ந்த அப்பா ஆர்யா, இந்த காலத்தில் வாழும் மகன் ஆர்யா என இருவேறு கெட்-அப்புகளில், கேரக்டர்களில் ஆர்யா அழகாகவே நடித்திருக்கிறார். சில இடங்களில் அப்பா ஆர்யாவும், அவரது காதலும் மகன் ஆர்யாவையும் அவரது காதலையம் ஓவர்டேக் செய்து விடுவதும் குறிப்பிடத்தக்கது.


சந்தானம், ஜெகன் ஆகியோருடன் ஆர்யா செய்திருக்கும் காமெடியும் கலகலப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை! மகன் ஆர்யாவின் ஜோடி ஸ்ரேயா, வழக்கம் போலவே துருதுரு கேரக்டரில் விறுவிறு என நடித்து ஓவர் ஆக்டிங் செய்து, ஓவர் கிளாமரும் காட்டி ரசிகர்களை தன்வசப்படுத்தி விடுகிறார்.


அப்பா ஆர்யாவின் ஜோடியாக மீனாள் பாத்திரத்தில் வரும் ப்ரீத்தி, பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு; அம்மணிக்கு நிறையவே நடிக்க வாய்ப்பிருப்பதால் ஸ்ரேயாவை விட நிறையவே ஸ்கோர் செய்திருக்கிறார்.


சண்முகசுந்தரம், ரவிச்சந்திரன்,சுகுமாரி,வையாபுரி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.அப்பா ஆர்யாவின் நண்பராக வரும் அனூப்குமார் மூலம் இயக்குநர் ஏதோ சொல்ல வருகிறார் என்பது முன்பாதியிலேயே புரிந்தாலும், பின்பாதியில் அவர் மீதே கதை பயணிப்பதை எதிர்பார்க்க முடியவில்லை.


அதே மாதிரி அப்பாவின் காதலி, ஆர்யாவுக்கு என்னமுறை? என்பதையும் அவரது மகள் ஆர்யாவுக்கு என்ன உறவாகிறார்? என்பதையும் யோசித்தால் ஏதேதோ என்னவெல்லாமோ தோன்றுகிறது. ஆனால் அந்த எண்ண ஓட்டத்திற்கு எல்லாம் இடம் கொடுக்காமல், அப்பாவிற்கு நிறைவேறாத காதல், மகனுக்கு நிறைவேறுவதாக படத்தை முடித்திருக்கும் இயக்குநர் கே.மணிகண்டனுக்கு ரொம்பவே துணிச்சல்தான்.


ஏமாற்றத்தில் கே.பி.குருதேவின் ஒளிப்பதிவிலும் கலோனியல் கஸின்ஸ் ஹரி-லெஸ்லியின் இசையமைப்பிலும். சிக்குபுக்கு டெக்னிக்கலாக காட்டும் பிரம்மாண்டத்தை சில இடங்களில் ஆமை வேகத்தில் நகரும் கதையிலும், காட்சி அமைப்பிலும் காட்டியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். சிக்குபுக்கு கதைக்கும்,பெயருக்கும் என்ன சம்பந்தம் என ஆராயாமல் சட்டுபுட்டுன்னு போய் ஒருமுறை பார்க்கலாம் !!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...