ஒட்டமெடுத்த திமுக திரையுலக ஜால்ராக்கள்

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திரையுலகின் ஜாம்பவான்களாக, அதிகாரத்தில், தலைவர் பதவியில் இருந்த ராம.நாராயணன், வி.சி.குகநாதன் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கும் ராம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் சொந்த வேலை காரணமாகவும், புதிய பட வேலையில் ஈடுபட இருப்பதாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்து கொள்கிறேன்.


இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த பட அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், திரைப்பட தொழிலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.


பெப்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள வி.சி.குகநாதன் அளித்துள்ள பேட்டியில், `திரைப்பட தொழிலாளர்களுக்காக கடந்த 2 வருடங்களாக அரசின் உதவியை பெற்று, என்னென்ன நன்மைகள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன்.


தொடர்ந்து அதை செய்ய முடியுமா? என்ற கேள்விக்குறி ஏற்பட்டு இருக்கிறது. எனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டேன். என் ராஜினாமா கடிதத்தை செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோரிடம் கொடுத்து விட்டேன், என்று கூறியுள்ளார்.


முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் ஏராளமான பாராட்டு விழாக்களை எடுத்தவர்கள்தான் இந்த ராம.நாராயணனும், வி.சி.குகநாதனும். அதேபோல கருணாநிதி பங்கேற்கும் திரையுலகம் தொடர்பான அனைத்து விழாக்களிலும் இவர்கள் 2 பேரும் ஆஜராகி கருணாநிதி திரைத்துறைக்கு செய்த சலுகைகளை குறிப்பிட்டு பாராட்டி பேசி கருணாநிதியை சந்தோஷப்படுத்துவார்கள்.


பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் தமிழ் திரையுலகம் கருணாநிதிக்காக நடத்திய பாராட்டு விழாவில் அரசியல்வாதி கெட்-அப்பில் கலந்து கொண்ட அஜித் பேசும்போது, ஒரு பிரச்னைன்னா திரைத்துறையில, பதவில இருக்கிற ஒரு சிலர் அறிக்கை விட்டுடுறாங்க.


நாங்க ஊர்வலம் எடுக்கப் போறோம்னு அறிக்கை விடுறாங்க. பதவில இருக்கிற ஒரு சிலர், நடிகர்கள் எல்லாரும் கலந்துக்கணும்னு சொல்லி மிர‌ட்டி வர வைக்கிறாங்க. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. வராவிட்டா ஒத்துழைப்பு தரமாட்டோம்னு மிரட்டுறாங்கய்யா. முடிங்கய்யா. அதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க.


அதுக்கு பயந்து வரவேண்டியிருக்கு, என்று நியாயமான கருத்துக்களை தெரிவித்து ஒட்டுமொத்த திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றார். அதன் பிறகு அஜித் சந்தித்த பிரச்னைகள் ஏராளம்.


இன்று கருணாநிதி ஆட்சி மாறியதும், பதவியை விட்டு விலகும் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் அஜித் விவகாரத்தில் ரொம்பவே மூக்கை நுழைத்தார். பாடகசாலை என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ஊரோடு ஒத்துப் போகணும் என்று ஒரு பழமொழி உண்டு. அதனை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.


தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும் எதிர்த்துதான் நிற்போம் என்றால், இவர்களை எப்படி மேலோ கொண்டு வந்தோமோ... அதே போல் இருக்கும் இடம் தெரியாமலும் செய்து விடுவோம், என்று மிரட்டும் தொனியில் பேசினார். பின்னர் அஜித், கருணாநிதியை சந்தித்து மன்னிப்பு கேட்ட பிறகே பிரச்னை முடிவுக்கு வந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...