வேலாயுதம் - விஜய்யின் ஆயுதம் - விமர்சனம்

விஜய் ரசிகர்களுக்கு, விஜய் படைத்திருக்கும் தீபாவளி விருந்து "வேலாயுதம்". லாஜிக் பார்க்காமல் போனால், விஜய்யின் மேஜிக்கை காட்சிக்கு காட்சி மற்றவர்களும் ரசித்துவிட்டு வரலாம்!

கதைப்படி, தமிழக உள்துறை மந்திரியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள், தென் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் பல இடங்களில் பாம் வைத்து, பல உயிர்களை தீர்த்துகட்ட திட்ட தீட்டி சென்னையில் ஊடுருவுகின்றனர்.

இதனிடையே பெரிய அளவில் கள்ளநோட்டு அச்சடிப்பது, விபச்சாரத்திற்கு பெண்களை கடத்தி விற்பது என எண்ணற்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மந்திரி கும்பலின் முகத்திரையை கிழிக்க முயற்சிக்கின்றனர் பத்திரிக்கை நிருபர்களான ஜெனிலியாவும் அவரது சகாக்களும்.

தங்களை பற்றிய உண்மை அனைத்தையும் தெரிந்து கொள்ளும் அவர்களை கூண்டோடு கைலாசம் அனுப்ப நினைக்கிறது ரவுடி கும்பல்! அதில் அதிர்ஷடவசமாக தப்பி பிழைக்கும் ஜெனிலியா, மந்திரி கும்பலின் குண்டு வெடிப்பு சதியை எச்சரிக்கை கடிதமாக எழுதி, அதை நிச்சயம் தடுப்பேன்...என்று எழுதி வைத்துவிட்டு, எதேச்சையாக அதனடியில் வேலாயுதம் என்று ஒரு பெயரையும் குறித்து வைத்துவிட்டு குற்றுயிரும் கொலை உயிருமாக பொதுமக்கள் சிலரது உதவியோடு மருத்துவமனையில் மரணபடுக்கையில் கிடக்கிறார்.

ஜெனிலியாவின் கற்பனை கதாபாத்திரமான வேலாயுதமாக, கிராமத்தில் பால் விற்கும் தொழில் செய்யும் வேலாயுதமான விஜய், எப்படி விஸ்வரூபமெடுக்கிறார்? ஆக்ஷ்ன் காட்சிகளில் எவ்வாறு அடித்து தூள் பரத்துகிறார்..?

மந்திரி கும்பலுடன் கூட்டணி அமைத்து, நாச வேலைகளில் இறங்கும் தீவிரவாத கும்ப‌லை எதுமாதிரி எல்லாம் ஒழித்து கட்டுகிறார்...? என்பது தான் "வேலாயுதம்" படத்தின் மீதிக்கதை மட்டுமல்ல... மொத்த கதையும்கூட!

வேலாயுதமாக விஜய், தங்கை பாசத்துடன் கிராமத்தில் செய்யும் சேட்டைகளில் ஆகட்டும், சிட்டிக்கு வந்து தீவிரவாதிகளையும் அவர்களுக்கு அடைக்கலம் தரும் மந்திரி கும்பலையும் வேட்டையாடுவதிலாகட்டும் அக்மார்க் விஜய் முத்திரையை பதித்து, தன் பரமவிசிறிகளை மட்டும் திருப்தி படுத்தியிருக்கிறார்.

பிற தரப்பினரையும் திருப்திபடுத்த, அரசியலில் புது முடிவு எடுத்து திருப்திபட்டுக்கொண்ட மாதிரி, நடிப்பிலும் புதிய முயற்சியில் இறங்கலாம் விஜய்...! மற்றபடி காதல், மோதல், காமெடி, டிராஜிடி, சென்டிமெண்ட் எல்லாவற்றிலும் வழக்கம் போலவே ஸ்கோர் செய்து படத்தை ஜனரஞ்சகமாக தூக்கி நிறுத்த இயக்குநருடன் சேர்ந்து ரொம்பவே மெருகேட்டிருக்கிறார் விஜய்!

பெண் பத்திரிக்கை நிருபராக ஜெனிலியா, விஜய்யின் கிராமத்து முறைப் பெண்ணாக ஹன்சிகா மோத்வானி, விஜய்யின் பாசக்கார தங்கையாக சரண்யா மோகன், மூவரில் தங்கை சரண்யா மோகனுக்கே முக்கியத்துவமும், நடிக்கும் வாய்ப்பும் ஜாஸ்தி என்பதால் க்ளைமாக்ஸில் இறந்தும் நம் மனதில் நிற்கிறார்.

ஸ்பீடாக சந்தானம் பண்ணும் சேட்டைகள் வழக்கம் போலவே கொஞ்சம் காமெடி, நிறைய காமநெடி. பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், பிளாக் பாண்டி, பரோட்டா சூரி என எக்கச்சக்க பேர் படத்தில் உண்டென்றாலும், நல்ல போலீஸாக வரும் சாயாஜி ஷிண்டே உள்ளிட்டவர்களே நடிப்பில் மிளிர்கிறார்கள், தெரிகிறார்கள் என்பது வேலாயுதம் படத்தின் பலம், பலவீனம் இரண்டுமாகும்!

படத்தின் ஆரம்ப காட்சியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்... தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு, உள்துறை அமைச்சர் சதி என விஜயகாந்த் பட ரேன்ஜூக்கு பில்-டப்புகளை கொடுத்துவிட்டு, அடுத்த ரீலிலேயே தங்க‌ை பாசம், கிராமத்து பால்காரன் என படத்தின் முன்பாதி மொத்தமும் காமெடி விஜய்யையே காட்டி, பின்பாதி படத்தில் ஆக்ஷ்னில் அடித்து தூள் பரத்துவது என்னதான் எம்.ஜி.ஆர்., காலத்து புதிய டிரண்ட் என்றாலும், சற்றே போரடிப்பதும், அது விஜய்க்கு பொருந்தாமலிருப்பதும், "வேலாயுதம்" படத்தின் மைனஸ் பாயிண்டுகளில் ஒன்று.

அதை முடிந்தவரை மறக்கடித்து, மழுங்கடித்திருக்கிறது. விஜய் ஆண்டனியின் இதமான இசையும், ப்ரியனின் பதமான ஒளிப்பதிவும் படத்திற்கு ஆறுதல்!

ஒருபக்கம் வேகமாக ஓடும் ரயிலை நிறுத்துவது, பொது மக்களை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுவது, மற்றொரு பக்கம் தங்கை பாசம், காதலி மீதான நேசம் என விஜயகாந்த் பாணியில், விஜய்யின் கொள்ளை பரப்பு படமாக, ஆஸ்கர் ரவிச்சந்திரனின் துட்டில், "வேலாயுதம்" படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குநர் ஜெயம் ராஜா! பலே.பலே!!

ஆக மொத்தத்தில் "வேலாயுதம்" - விஜய்யின் "ஆயுதம்!"

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...