ஷங்கரின் அடுத்த படத்தின் நாயகன் விக்ரம்

நண்பன் படத்தை தொடர்ந்து ஷங்கர் அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஷங்கரின் கனவு படமான எந்திரன் படத்தை முடித்த பிறகு, இந்தியில் வெளியான 3-இடியட்ஸ் படத்தை அப்படியே ரீ-மேக் செய்தார் ஷங்கர்.

அந்தபடமும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து புதிய படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார் ஷங்கர்.

வழக்கமாக ஷங்கர் படங்களுக்கு சுஜாதா தான் வசனம் எழுதுவார். ஆனால் நண்பன் படத்தில் சுஜாதாவுக்கு பதில் பாடலாசிரியர் மதன் கார்க்கியை வசனம் எழுத வைத்தார் ஷங்கர்.

இந்நிலையில் இப்போது எழுத்தாளர் சுபாவை தன்னுடைய அடுத்த படத்தில் வசனம் எழுத வைக்கிறார்.

படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் வேளையில் ஹீரோ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இப்படத்தின் ஹீரோவாக விக்ரம் தான் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே ஷங்கர்-விக்ரம் காம்பினேஷன் அந்நியன் படத்தில் சூப்பராக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

கமலுக்காக தவம் கிடக்கும் அமீர்

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான டைரக்டர் அமீர், அவரை வைத்து எப்படியாவது படம் பண்ண வேண்டும் என்று முனைப்போடு, அவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்து வருகிறார்.

இந்த தவம் இப்போது ஆரம்பமானது அல்ல, அமீரின், ஆதி பகவன் படத்திற்கு முன்பு இருந்தே தொடர்கிறதாம்.

ஆனால் கமல்ஹாசன் அப்போது விஸ்வரூபம் படத்திற்கான பிஸியில் இருந்ததால் முடியவில்‌லையாம்.

இப்போது கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தினை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். இதனால் மீண்டும் அவரை அணுக திட்டமிட்டு வருகிறார் அமீர்.

இதுகுறித்து அமீர் கூறியுள்ளதாவது, என்னுடைய ஆதி பகவன் படத்தை முடித்த பிறகு, கமல்ஹாசனை வைத்து படம் இயக்க திட்டமிட்டேன். இதுதொடர்பாக ஏற்கனவே அவரிடம் பேசி இருக்கிறேன். இரண்டு-மூன்று கதைகள் கூட அவரிடம் சொல்லியிருக்கிறேன்.

ஆனால் இருவரும் எங்களது பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் அதுபற்றி தொடர்ந்து பேச முடியவில்லை. இப்போது நானும் எனது ஆதி பகவன் படத்தை முடிக்க இருக்கிறேன். கமலும், விஸ்வரூபம் படத்தை முடிக்க உள்ளார்.

ஆகையால் விரைவில் கமலை சந்தித்து அடுத்தபடம் குறித்து பேச இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கமல், ஜாக்கி ஜான், சல்மான் கான் கூட்டணியில் பிரம்மாண்ட படம்

கோலிவுட் மட்டுமல்லாது இந்தியா முழுக்க சினிமா பற்றிய இப்போதைய ஹாட் டாக்கே ஆஸ்கர் ரவிச்சந்திரனை பற்றி தான். அதாகப்பட்டது ஆஸ்கர் ரவிச்சந்திரன் அடுத்து, கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் என்பது அனைவரும் தெரிந்த செய்தி தான்.

இப்போது புதிய செய்தி என்னவென்றால் இந்தபடத்தில் கமலுடன் சேர்த்து ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஜான், மற்றும் பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் ஆகி‌யோரையும் நடிக்க வைக்க முயற்சி செய்து ‌வருகிறாராம் ரவிச்சந்திரன்.

சுமார் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படம் அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்குமாம்.

மேலும் இந்தியாவில் இவ்வளவு பெரிய பொருட் செலவில் தயாராகும் முதல் படம் இது என்றும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜாக்கி ஜானை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்பது ரவிச்சந்திரன் கனவு, அதற்கு அச்சாரமாக தன்னுடைய தசாவதாரம் படத்தின் ஆடியோ ரிலீஸை ஜாக்கி ஜானை வைத்து பிரம்மாண்டமாக நடத்தினார் ரவி.. என்பது நினைவிருக்கலாம்.

மீண்டும் ரிலீஸ் ஆகிறது முப்பொழுதும் உன் கற்பனைகள்

முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் அதன் தயாரிப்பாளர்கள். திரையுலகில் நல்ல கதையம்சம் கொண்ட பல படங்கள் தவறான நேரத்தில் ரிலீஸ் ஆனதால் பெட்டிக்குள் முடங்கியிருக்கின்றன.

ஒரு சில படங்கள் பரபரப்பான விளம்பரங்கள் மற்றும் சீன்களில் மாற்றம் செய்து மீண்டும் ரிலீஸ் செய்து வெற்றி பெறுகின்றன.

அந்த வகையில் வெங்காயம், ஆரண்ய காண்டம் போன்ற படங்கள் ரீ-ரிலீஸாக இருக்கிறது.

இதேபோல சமீபத்தில் வெளியான முப்பொழுதும் உன் கற்பனைகள் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்காததால் கத்தரித்த சில சீன்களை சேர்த்து ஏ சான்றிதழோடு மீண்டும் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள்.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் நடிகை அனுஷ்கா காதல்...?

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பதாக பாலிவுட்டிலும், இந்திய கிரிக்கெட் வட்டாரத்திலும் கிசுகிசுக்கப்படுகிறது. பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர்.

யாஷ் சோப்ராவின், ரப் நே பனாதி ஜோடி என்ற படம் மூலம் அறிமுகமான அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னாவுடன் காதல் வலையில் சிக்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக இவருவரும் ஒன்றாக சுற்றி திரிவதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்‌திரேலிய சுற்று பயணம் சென்ற போது, அனுஷ்கா தன்னுடைய சூட்டிங்கை ரத்து செய்துவிட்டு ரெய்னாவுடன் ஊர் சுற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இதனிடையே அனுஷ்காவின் மேனேஜர் இந்த செய்தியை மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ரெய்னாவை, அனுஷ்காவுக்கு தெரியும், மற்றபடி அவர்களுக்குள் வேறு எந்த தொடர்பும் கிடையாது என்று கூறியுள்ளார்.

சிம்பு ஆல்பத்தில் நயன்தாரா?

சிம்புவுடன் காதல் முறிவுக்குப் பின்னர் தான் நயன்தாரா பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்து கல்யாணம் வரை சென்றார். தற்போது அந்த காதலும் முறிந்து விட்ட நிலையில் தனிமையில் இருக்கிறார் நயன்தாரா.

முன்னாள் காதலி என்ற பட்சாதபமோ என்னவோ தெரியவில்லை!! வாட்டத்தில் இருக்கும் நயனுக்கு சிம்பு தூது விட்டு இருக்கிறாராம்!!

என்னமோ ஏதோ என்று நினைக்க வேண்டாம்...அவரே இசையமைத்து பாடிய லவ் ஆன்தம் ஆல்பத்தில் வருகிற ஒரு மியூசிக் பிட்டுக்கு ஆடுவதற்காக நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம்..!!

பிரபுதேவாவை கடுப்பேற்ற வேண்டும் என நினைத்தாரோ என்னவோ நயனும் சிம்பு ஆல்பத்தில் ஆட்டம் போட ஓகே சொல்லிவிட்டார் என றெக்கை கட்டி பறக்கிறது செய்தி!!

அப்படியா சிம்பு..!! என்ன சொல்றீங்க நயன்தாரா..!?

மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை - விஜய் தயாரிக்கிறார்!!

தமிழ் சினிமாவில் விஜயகாந்திற்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்த படம் சட்டம் ஒரு இருட்டறை. விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மாபெரும் ஹிட்டானது.

இப்போது இந்தபடம் மீண்டும் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. படத்தின் ஹீரோவாக நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக கோ கார்த்திகாகவும், 2வது நாயகியாக பியாவும் நடிக்க இருக்கின்றனர். மேலும் படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகை மீனா நடிக்க இருக்கிறார்.

இவர் விக்ரமின் அக்காவாக நடிக்க இருக்கிறாராம். புதுமுகம் ரமேஷ் இயக்கும் இப்படத்தை, நடிகர் விஜய்யே தயாரிக்க இருக்கிறார்.

விஜய் புதிதாக கில்லி பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார்.

தனது முதல் படைப்பாக தன் அப்பா இயக்கிய முதல்படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பு வெளியாக உள்ளது.

முப்பொழுதும் உன் கற்பனைகள் கதை யாருடையது?

சமீபத்தில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இயக்கத்தில் அமலாபால், அதர்வா ஜோடி நடிக்க திரைக்கு வந்திருக்கும் தமிழ்படம் "முப்பொழுதும் உன் கற்பனைகள்"! இப்படத்தை முதலில் செந்தில் வஸந்த் என்பவர்தான் இயக்கினாராம்!

இதே கதையை, ஜெயராமன்-எல்ரெட்குமாரின் ஆஸ்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பில் இதே அதர்வா - அமலாபால் ஜோடிகள் நடிக்க செந்தில் வஸந்த் இயக்கிய போது ஏற்பட்ட ஒரு சில வம்பு தும்புகளால் அந்த இயக்குநரை தூக்கி விட்டு அவருக்கு பதில் இப்பட தயாரிப்பாளர்களுள் ஒருவரான எல்ரெட் குமார் இயக்குநர் அவதாரம் எடுத்தாராம்!

இதற்காக முதல் இயககுநர் செந்தில் வஸந்த்துக்கு மெட்டில்மென்ட்டும் நடந்ததாம். ஆனாலும் "முப்பொழுதும் உன் கற்பனைகள்" கதை தன்னுடைய சொந்த கதை என எல்ரெட் கூறி வருவதால் மீண்டும் பிரச்னையை பெரிதாக்கும் முடிவில் இருக்கிறாராம் அந்த செந்தில் வஸந்த்!

5 கதாநாயகிகளுடன் நிஜம் நிழலாகிறது

ஐந்து கதாநாயகிகளுடன் உருவாகும் புதிய படத்திற்கு நிஜம் நிழலாகிறது என்று பெயரிட்டுள்ளனர். ஒரு நகரில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. நிஜத்தில் நடைபெறும் அந்த கொலை சம்பவங்கள் அப்படியே ஒரு திரைப்படத்தில் காட்சிகளாக்கப்படுகின்றன.

இப்படி திகில் - மர்மம் கலந்து ஒரு படம் தயாராகும் இப்படத்தில் புளோரா, மும்பை அழகி மீனாட்சி, காஜல், சான்ட்ரா ஆகிய 4 பேருடன் இன்னொரு பிரபல கதாநாயகியும் நடிக்கிறார்.

தாநாயகனாக அறிமுகம் ஆகும் அருள்ராஜ், படத்துக்கு இசையும் அமைக்கிறார். சித்ரா லட்சுமணன், பஞ்சு சுப்பு, ஜெகன், சசிகுமார் ஆகிய 4 பேரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஜி.கனகராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பூந்தோட்ட காவல்காரன், பாலைவன பறவைகள், தெய்வக்குழந்தை, போக்கிரி தம்பி, காவல் நிலையம் ஆகிய படங்களை டைரக்டு செய்த செந்தில்நாதன் இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.

அகத்தம்மா பிக்சர்ஸ் சார்பில் மலேசியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஏ.எம்.ஏ. தயாரிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் வரும் 26ம்தேதி ஊட்டியில் தொடங்குகிறது.

பாடல் காட்சிகளை தாய்லாந்தில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருங்காலியிடம் தப்பித்த நடிகையும், சிக்கிக் கொண்ட நடிகையும்

அந்த கருங்காலி இயக்குநர் கம் நடிகர்., ஊரிலேயே கல்யாணமானவர், குடும்பஸ்தர், என்றாலும் முன்பு தேவகி என்றொரு நடிகையுடன் ( இப்பொழுது அந்த நடிகை அக்கா, அம்மா, அண்ணி கேரக்டர்களுக்கு வந்து விட்டார்.) தனிக்குடித்தனம் இருந்து வந்தார்.

நடிக இயக்குநர் ஆவதற்கு முன்பே நான்கைந்து நல்ல படங்களை இயக்கி இருக்கிறார்.

அதன் பிறகு தற்போது முன்னணியில் இருக்கும் அஞ்சலியை தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தவர் (அந்தப் படம் ஆரம்ப நிலையிலேயே நின்றும் போனது..) என்ற முறையில் அவருக்கும் எல்லாமும் நான் என எகத்தாளமாக பேட்டியெல்லாம் கொடுத்தார்!

தன்னுடன் கருங்காலி படத்தில் காட்டாயப்படுத்தி ஒரு ஜோடியாக அஞ்சலியை நடிக்கவும் வைத்தார்.

இப்போது அதே கருங்காலியில் தன் ஜோடியாக நடித்த அஸ்மிதாவுடன் ஒன்றாகவே கோலிவுட் விழா வேத்திகளுக்கு உலா வருகிறார்!

விவரமறிந்தவர்கள் அஞ்சலி தப்பித்துக் கொண்டார் ஒருவழியாக.. பலமாக அஸ்மிதா சிக்கிக்கொண்டார் கருங்காலியிடம் என சிரிக்கின்றனர். அடப்பாவமே..!

குஷ்புவுக்கு கமல் தந்த இன்ப அதிர்ச்சி

நடிகை குஷ்புவுக்கு, கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சில தினங்களுக்க முன்னர், நடிகை குஷ்பு வீட்டிற்கு போன் வந்திருக்கிறது. போனை எடுத்த குஷ்புவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, நான் கமல்ஹாசன் பேசுகிறேன்.

விஸ்வரூபம் சூட்டிங்கிற்கு கொஞ்ச வர முடியுமா என்று கமல் கேட்க, குஷ்புவும் கமலின் போன் அழைப்பை ஏற்று சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு குஷ்புவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அப்படி என்ன இன்ப அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா...?

இதோ குஷ்புவே சொல்கிறார் கேளுங்கள், நான் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற போது அங்கு கமல்ஹாசன் கதக் டான்ஸ் கற்றுக்கொண்டு இருந்தார்.

அவருக்கு பிரபல கதக் மாஸ்டர் பிர்ஜூ மகாராஜ், கதக் நடனம் சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்தார்.

எனக்கு கதக் டான்ஸ் தெரியும், அதுமட்டுமல்ல கதக் மாஸ்டர் பிர்ஜூ மகாராஜாவையும் ரொம்ப பிடிக்கும். அதன் காரணமாகத்தான் எனது நண்பர்(கமல்) எனக்கு போன் போட்டு விஸ்வரூபம் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வர வழைத்தார்.

சூட்டிங் ஸ்பாட்டில் பிர்ஜூ மகாராஜை பார்த்ததும் ரொம்ப ஆச்சர்யமாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது.

பின்னர் அவரை சந்தித்து சில நிமிடம் பேசினேன். பிர்ஜூவை சந்திக்கும் வாய்ப்‌பை ஏற்படுத்தி கொடுத்து, இன்ப அதிர்ச்சியளித்த கமல்ஹாசனுக்கு எனது நன்றி என்றார்.

டைரக்டரை அதிர வைத்த கிராம மக்கள்

டைரக்டர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்துடன் சூரி, கிருஷ்ணலீலை ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் ஸெல்வன் தற்போது மாயவரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஸெல்வனிடம் உதவி இயக்குனராக புணிபுரிந்த ராம்தேவ் இயக்கும் இப்படத்தின் சூட்டிங் பண்ருட்டி பகுதியில் நடந்து வருகிறது. படத்தில் இடம்பெறும் அண்ணன் அய்யனாரு மீசைகாரு... எனத்தொடங்கி தொடரும் ஒரு பாடல் காட்சியில் ஸெல்வன் நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது சூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த ஒரு பாட்டி, ஸெல்வனைப் பார்த்து உங்க படங்கள் எல்லாம் பார்திருக்கேன்; உன்னோட நடிப்பு எனக்கு பிடிக்கும், என்று கூறியிருக்கிறார். இதனை கேட்டு அதிர்ந்து போன ஸெல்வன், தான் இதற்கு முன்பு எந்த படத்திலுமே நடிக்கவில்லையே என கூறியிருக்கிறார்.

அப்போது பக்கத்தில இருந்த ஒரு அம்மா, அந்த பாட்டி உங்களை நடிகர் ராஜ்கிரண்னு நெனைச்சுகிட்டு இருக்காங்க என்று கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் அந்த ஊரில் சூட்டிங் பார்க்க வந்த பலரும் ஸெல்வனை ராஜ்கிரன் என்றே நினைத்திருக்கிறார்கள்.

மாயவரம் படம் குறித்து டைரக்டர் ஸெல்வன் கூறுகையில், ராம் தேவ் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு ஜோடியாக பூ, ஒன்பது ரூபா நோட்டு படங்களில் நடித்த இன்ப நிலா நடிக்கிறார். மற்ற அனைத்து கதா பாத்திரங்களும் மாயவரம் சீர்காழியில் உள்ள மக்கள் நடித்துள்ளனர்.

இது ஒரு சிறப்பு அம்சமாகும். ஒளிப்பதிவை ஆண்டனி கவனிக்க, ஸ்ரீ சாய் இசை, கலை தேவராஜ், மைனா முருகன் சண்டை பயிற்சிகளை மேற்கொள்ள, கே. பி. அஹமத் படதொகுப்பினை கவனிக்க, வயலார் ராஜேந்திரன், நடராஜன், ஜெகதீசன், திருவேற்காடு சங்கர் தயாரிக்கின்றனர்.

மாயவரம் திரைப்படத்தின் சூட்டிங், மாயவரம், சீர்காழி, திருமுல்லை வாசல், தொடுவா, நெய்த வாசல், ஆதமங்கலம், கொண்டால், பண்ருட்டி மற்றும் பூந்தமல்லி இடங்களில் நடைபெற்றது, என்றார்.

பில்லா-2-வில் அஜித்தின் மிரட்டல் சண்டை காட்சிகள்

அஜித் நடிப்பில் உருவாகி வரும் பில்லா-2 படத்தில் ரொம்ப ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் அஜித் மிரட்டலாக நடித்து இருக்கிறாராம். மங்காத்தா படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் பில்லா-2.

டேவிட் எனும் தூத்துக்குடி இளைஞன் எப்படி பில்லாவாக மாறினான் என்பதே பில்லா-2 படத்தின் கதை.

படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்க, உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்டி இப்படத்‌தின் டைரக்ஷ்ன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இப்படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. படத்தில் அஜித் நடிப்பை காட்டிலும், அவரது சண்டைக்காட்சிகள் தான் மிரட்டலாக வந்திருக்கிறதாம்.

ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி, ரயில் சண்டைக்காட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடு சண்டைக்காட்சி என்று ரொம்ப ரிஸ்க் எடுத்து தன் உயிரை பணயம் வைத்து மிரட்டலாக நடித்திருக்கிறாராம்.

சுருக்கமாக சொல்லப்போனால் ஹாலிவுட் பட ரேஞ்ச்சுக்கு சண்டைக் காட்சிகள் வந்திருக்கிறதாம்.

அமெரிக்க விழாவில் பங்கேற்க ரூ.25 லட்சம் கேட்ட வடிவேலு

அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நடிகர் வடிவேலு ரூ.25 லட்சம் கேட்டு இருப்பது விழாவை ஏற்பாடு செய்திருக்கும் தமிழ் சங்கத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்த வடிவேலு, தி.மு.க.,வுக்கு ஆதரவாக சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போய், அதன்பிறகு அவர் சந்தித்த பிரச்னைகள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

இப்போது படவாய்ப்பு இன்றி தவித்து வரும் வடிவேலுவுக்கு, அமெரிக்காவில் தமிழ் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் பங்கேற்க அழைப்பு வந்திருக்கிறது.

ஏற்கனவே பலமுறை இதுபோன்ற அழைப்புகள் வந்தபோது வடிவேலு சினிமாவில் பிஸியாக இருந்ததால் பங்கேற்க முடியவில்லை. இப்போது படவாய்ப்பு இல்லாததால் அவரும் பங்கேற்க ஓ.கே. சொல்லிவிட்டார்.

இது விழா குழுவினருக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தை ஏற்படுத்தினாலும், அதற்கு அடுத்து வடிவேலு கேட்ட டிமாண்ட், விழா குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க வடிவேலு ரூ.25 லட்சம் கேட்டாராம்.

இவ்வளவு பணம் கொடுத்து வடிவேலுவை விழாவுக்கு அழைத்து வர யாருக்கும் விருப்பம் இல்லையாம், அதனால் வடிவேலு இல்லாமலேயே விழாவை நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.

கதைக்கு தேவைப்பட்டால் எப்படின்னாலும் நடிப்பேன் - த்ரிஷா

படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், என்று நடிகை த்ரிஷா கோபத்துடன் கூறியுள்ளார்.

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்குப்படமான தம்மு படத்தில் அவர் துணிச்சலாக கவர்ச்சி காட்டியுள்ளார்.

இதுவரை நடித்த கவர்ச்சி எல்லையை இப்படத்தில் தாண்டி உள்ளதாக தெலுங்கு பட உலகம் கிசு கிசுக்கிறது.

ஆபாச படத்தில் நடிப்பது போன்று ஆடைகளை களைந்து ஒரு காட்சியில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேநேரம் புதுமுக நடிகைகளின் போட்டியை சமாளிக்கத்தான் த்ரிஷா இதுபோன்ற காட்சிகளில் நடிக்க சம்மதித்து இருப்பதாகவும் திரையுலகில் பேசப்படுகிறது.

இதனால் கோபமடைந்த த்ரிஷா பேட்டியொன்றில், என்னை இளமையாக காட்ட கவர்ச்சி காட்சிகளில் துணிந்து நடிப்பதாக வெளியான செய்திகள் தவறானவை.

தம்மு படத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன். படத்திற்கும், கதைக்கும் தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், என்று கூறியிருக்கிறார்.

அஜித் பிறந்தநாளில் நோ... தள்ளிபோகிறது பில்லா-2

போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அஜித்தின் பில்லா-2 அவரது பிறந்தநாளில் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து பில்லா-2 உருவாகி வருகிறது. உன்னைப்போல் ஒருவன் சக்ரி டோல்டி இயக்கும் இப்படத்தில் அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.

பில்லா-2 படம் அஜித் பிறந்த தினமான மே-1ம் தேதியில் ரிலீஸ் ஆகும் என்று சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

ஆனால் சமீபத்தில் பெப்சி தொழிலாளர்கள் பிரச்னையால் இப்படத்தின் சூட்டிங் பாதிக்கப்பட்டது. இதனால் பட ரிலீஸ் தள்ளிப்போகும் என்று படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

மே 2வது அல்லது கடைசி வாரத்தில் பில்லா-2 வெளியாகலாம் என்று தெரிவித்தார்.

10 நிமிடத்திற்கு ரூ.1கோடி வாங்கும் பிரபல நடிகை

நடிகை கத்ரீனா கைப், பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில், 10 நிமிடம் பங்கேற்க ரூ.1 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைப். இவர் தன்னுடைய படங்களுக்கே கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்.

இதுபோதாது என்று விளம்பரம், பொது விழாக்களில் பங்கேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் தனியாக ஒரு லம்ப் தொகையை பெறுகிறார்.

இந்நிலையில் கேரளாவில் வருகிற மார்ச் 25ம் தேதி ஒரு பேஷன் ஷோ நிகழ்சசி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கத்ரீனா பங்கேற்ற வேண்டும் என்று அவரிடம் கேட்டுள்ளனர்.

அவரும் வருகிறேன், ஆனால் ரூ.1 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

விழாக்குழுவினர் ஓ.கே., சொல்லிவிட்டனர். இத்த‌னைக்கும் கத்ரீனா அந்த விழா மேடையில் தோன்ற இருப்பது வெறும் 10 நிமிடம் தான். இதற்கு தான் இவ்வளவு பெரிய தொகை கத்ரீனாவுக்கு பேசப்பட்டு இருக்கிறது.

தென்னிந்திய நடிகைகளை பொறுத்தவரை இது போன்ற பொது விழாக்களில் பங்கேற்க குறைந்த சம்பளமே கேட்கின்றனர். அசின், ஸ்ரேயா, த்ரிஷா போன்றவர்கள் இதற்காக ரூ.30 லட்சம் வரை கேட்கிறார்களாம்.

அஜித் பிறந்த நாளில் பில்லா 2 ரீலிஸ்

அஜித்தின் பிறந்த நாளான மே 1ம்தேதி பில்லா 2 படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. அஜித் நடித்த ரீமேக் படமான பில்லா ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வெற்றிபெற்றது.

அந்த படத்தில் அஜித்தின் நடிப்பைப் போலவே நயன்தாராவின் பிகினி உடை மற்றும் நமீதாவின் கவர்ச்சியும் பரபரப்பாக பேசப்பட்டது.

பழைய பில்லாவில் இடம்பெற்ற வெத்தலைய போட்டேண்டி, மைநேம் இஸ் பில்லா ஆகிய பாடல்களும் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து பில்லா படத்தின் இரண்டாம் பாகம் பில்லா 2 என்ற பெயரில் தயாராகி வருகிறது.

இதில் அஜீத் ஜோடியாக பார்வதி ஓமன குட்டன் நடிக்கிறார்.

சக்ரி டோலட்டி இயக்கும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வருகிறது.

சண்டைக்காட்சிகள் அங்கு படமாகி வருகின்றன. அஜித் பிறந்த நாளான மே 1ம்தேதி பில்லா 2 படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்துடன் சூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அஜித்தை இயக்க போட்டி போடும் டைரக்டர்கள்

மங்காத்தா படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தின் மவுசு மேலும் கூடியிருக்கிறது. இதனால் அவரை வைத்து படம் இயக்க டைரக்டர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்தியில் நடிகர் சைப் அலிகான் நடிப்பில் வெளியான த்ரில்லர் படமான ரேஸ் படத்தை, தமிழில் அஜித்தை வைத்து ரீ-மேக் செய்ய பிரபல மும்பை பட நிறுவனம் ஒன்று முயற்சித்து வருகிறது.

இப்போது இந்தபடத்தை யார் இயக்குவது என்பது போட்டி. தற்போது அஜித் பில்லா-2வில் நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்து விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இதுதவிர சமீபத்தில் வெங்கட் பிரபு மீண்டும் அஜித்துடன் கூட்டணி சேர இருப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே மும்பை பட நிறுவனம், பிரபுதேவாவை இயக்குனராக தேர்வு செய்ய விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அஜித்தை இயக்குவது யார் என்பதில் மூன்று இயக்குனர்களிடையே கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இயக்குநருக்கு யெஸ் சொல்லிவிட்டு எஸ் ஆகும் நடிகர்கள்

இலங்கை தமிழர் பிரச்னையை பற்றி பேசமட்டுமே கட்சி நடத்தும் சீமான் இயக்குநரின் தொலைபேசி அழைப்போ., அலைபேசி அழைப்போ வந்தாலே லைனில் இருந்து கொண்டே இல்லை இல்லை..என்கின்றனராம் இளம் தளபதி நாயகரும், அலைபாய்ந்து ரன் எடுக்கும் நாயகரும்.

காரணம் இருவரும் இவரது இயக்கத்தில் நடிப்பதாக முன்பு ஒப்புக்கொண்டதை இன்னமும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இயக்குநர் மீண்டும் நடிக்க அழைப்பு விடுத்தவிடக் கூடாது! எனும் முன் எச்சரிக்கை தான் பாவம்!

ஆமாம் பின்னே ஒரு அரசியல் கட்சித் தலைவராக சென்ட்ரல், ஸ்டேட் இரண்டு கவர்ன்மன்டுகளையுமே அடிக்கடி பகைத்துக் கொள்ளும் சீமானின் இயக்கத்தில் நடித்து சிக்கலில் மாட்டிக் கொள்ள யார் தான் விரும்புவர்.?! என வினவுகிறது விவரமறிந்த வட்டாரம்! அதானே?!

நடிகர் விஷாலுக்கு இந்த நிலையா?

சமரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஷாலுக்கு இந்த நிலையா என கோடம்பாக்கம் உச்சு கொட்டி பரிதாபப்படுகிறதாம். சமரன் படத்தில் விஷாலை நடிக்க வைக்க, பிரகாஷ்ராஜ் அப்படத்தில் நடிக்கிறார் என கூறி தான் ஒப்பந்தம் செய்திருக்கிறது படத்தின் தயாரிப்பு தரப்பு!

ஆரம்பத்தில் பிரகாஷ் ராஜ் பெரிய சம்பளம் கேட்கிறார் என தயாரிப்பு நிறுவனம் கூற, வேணும்னா எக்ஸ்ட்ரா வர்ற அந்த சம்பளத்தை என் சம்பளத்தில் குறைச்சுகோங்க என்று ரிடக்ஷனும் கொடுத்திருந்தார் விஷால்.

எல்லாம் பிரகாஷ்ராஜின் கால்ஷீட்டுக்காக. ஆனால் சொன்னபடி பிரகாஷ் ராஜை கமிட் செய்யப்படவில்லை .

விசாரித்ததில், சமரன் படத்தை ஆரம்பித்த சமயத்தில் தான் இதே தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு படம் மண்ணைக் கவ்வ, நஷ்டத்தில் தயாரிப்பு நிறுவனம் தவிக்க ஆரம்பித்தது என்பது தெரிய வந்தது.

அப்புறமென்ன? பிரகாஷ்ராஜ்தான். அவருக்கு கொடுக்கிற சம்பளத்தை வைத்துக் கொண்டு அரை படத்தை முடித்துவிடலாமே என்று கணக்கு போட்டவர்கள், ஜே.டி.சக்ரவர்த்தியை பிரகாஷுக்கு பதிலாக நடிக்க வைத்துவிட்டார்கள்.

சம்பளத்தையும் தியாகம் செய்து, பிரகாஷ்ராஜையும் இழந்த விஷால்தான் பாவம் என பரிதாபத்துக்கு ஆளாகியிருக்கிறார் அவர்!!

அரவான் - சினிமா விமர்சனம்

சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலைத் தழுவி வசந்தபாலனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அரவான். முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத் தென் மாவட்டங்களில் உள்ள மூன்று ஊர்களுக்குள் நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதைக்களம். வேம்பூர் பகுதி மக்களுக்கு கன்னம் வைத்து திருடுவதுதான் குலத்தொழில்.

இந்த ஊருக்கு தலைவனாக பசுபதி வருகிறார். கூட்டமாக சென்று களவாடி வருவதில் வேம்பூர் மக்கள் அசகாய சூரர்களாக இருக்கின்றனர். இவர்களுடைய ஊரின் பெயரை சொல்லி, ராணி வீட்டில் ஆதி திருடி விடுகிறார். இதனால் பழி வேம்பூர் மேல் விழுகிறது. தன் ஊர் பழியை தீர்க்க திருடிய ஆதியை கண்டுபிடிக்கிறார் பசுபதி.

ஆதி திருடிய பொருளைத் திருப்பிக் கொடுத்துவிடுவதால் வேம்பூரின் பழி தீர்கிறது. ஆதியின் திறமையைக் காணும் பசுபதி அவரை தனது கூட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார். வேம்பூர் பெரிசுகளின் தூண்டுதலால் 5 தலைமுறையாக திருடவே முடியாத கோட்டையூரில் திருடச் செல்கிறார்கள். அதில் பசுபதி கூட்டத்துடன் ஆதியும் செல்கிறார்.

அந்த ஊரினை காவல் காக்கும் பொறுப்பு மாத்தூரை சேர்ந்த கரிகாலனிடம் இருக்கிறது. அரண்மனை, கடுங்காவல் இவையனைத்தையும் மீறி அந்த ஊரில் திருடிவிட்டு தப்பிக்கிறார்கள். அப்படி தப்பிக்கும்போது பசுபதி மட்டும் சிக்கிக் கொள்கிறார். ஆதி தலைமையில் மற்றவர்கள் தப்பிக்க, பசுபதியை கரிகாலன் குழு அடித்து உதைக்கிறது.

மறு இரவே ஆதி தனது திறமையினால் கரிகாலனின் காவல்களை உடைத்து பசுபதியை மீட்டு வருகிறார். இதனால் ஆதி மேல் காதலுறும் பசுபதியின் தங்கை, ஆதியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். அதையே பசுபதியும் சொல்ல, தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. நான் வேறு ஊர்க்காரன் என்கிறார் ஆதி.

அந்நேரத்தில் வேம்பூரின் மானம் ஜல்லிக்கட்டு வடிவில் ஊசலாடுகிறது. ஊர்மானம் காக்க பசுபதி காளையை அடக்க முயல்கிறார். அதில் குத்துப்பட்டு விழும் பசுபதியை காப்பாற்றும் ஆதி, காளையையும் அடக்கி விடுகிறார்.

வெற்றிக்களிப்பில் மிதந்து நிற்கும் ஆதியை கரிகாலன் தலைமையிலான மாத்தூர் ஆட்கள் அடித்து, இழுத்துச் செல்கின்றனர். அதைத் தடுக்கும் பசுபதியிடம் இது களவுப் பொருள் விவகாரம் அல்ல, எங்கள் ஊரின் பலி ஆள் இவன் என்றபடி இழுத்துச் செல்கிறார்.

காவல்காரக் கூட்டத்தினர் வாழும் சின்னையன்பட்டி ஊரைச் சேர்ந்தவர் ஆதி. அவர்கள் காவலுக்கு செல்லும் வேளையில் சின்னையன்பட்டியில் பரத் பிணமாக கிடக்கிறார். சுற்று வட்டாரத்தில் விசாரிக்கையில் பரத் மற்றொரு காவல்கார ஊரான மாத்தூரை சேர்ந்தவர் என்பதும், கரிகாலனின் மச்சினன் என்பதும் தெரிய வருகிறது.

மூன்று தலைமுறைகளாக இந்த இரண்டு ஊருக்கும் இருக்கும் பகை, இப்போது அதிகமாகிவிட, அப்பகுதி பாளையத்தார் வந்து தீர்ப்பு சொல்கிறார். கொலை செய்தவன் யாரென்று தெரியாததால் பழி சின்னையன்பட்டியை சேர்கிறது. பலியான ஊருக்கு பதிலாக அதே வயதுடைய சின்னையன்பட்டியைச் சேர்ந்த நபர் பலி கொடுக்கவேண்டும் என்பதுதான் அந்த தீர்ப்பு. இரு ஊரும் இதற்கு சம்மதிக்க, பலி ஆளாக ஆதி சிக்குகிறார்.

30 நாட்களுக்குப் பிறகு அவர் தானாக வந்து மாத்தூரில் பலியாக வேண்டும். இந்த 30 நாட்களுக்குள் பரத்தை கொன்றது யார் என ஆதி தேடிச் செல்கிறார். ஆதி தேடிச் செல்கையில் 30 நாள் முடிந்து போகிறது. இதனால் ஆதிக்கு பதிலாக அவரின் நண்பன் திருமுருகன் பலியாகிறார்.

இதனால் சொந்த ஊரும் ஆதியை கொல்ல துடிக்கிறது. மாத்தூரும் ஆதியைக் கொல்ல அலைகிறது. இந்நிலையில் ஆதியை காப்பாற்ற வேம்பூர் துடிக்கிறது? இறுதியில் பரத்தை கொன்றது யார்? கொன்றவனை ஆதி கண்டுபிடித்தாரா? காவல்காரனான ஆதி கள்ளனாக மாறியது ஏன்? அவரின் குடும்பம் எனன ஆனது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் எதிர்பாராத திருப்பங்களோடு விடை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் வசந்தபாலன்.

வரிப்புலியாக வரும் ஆதி, கொம்பூதியாக வரும் பசுபதி, வனப்பேச்சியாக வரும் தன்ஷிகா, மாத்தூரானாக வரும் கரிகாலன், வீரனனாக வரும் திருமுருகன் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் இப்படத்தில் நடிக்கவேயில்லை, வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஒவ்வொரு தன் கேரக்டரை உணர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

பரத், அஞ்சலி, தேவதாசியாக வரும் ஸ்வேதா மேனன், பாளையக்காரியாக வரும் ஸ்ருதி பிரகாஷ் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிறைகிறார்கள்.

முன்னூறு ஆண்டு பழமையான மக்களின் வாழ்விடங்களை, பழமை மாறாமல் ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன் நம் கண்முன் நிறுத்துகிறார். ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனையாளர் என அனைத்து டெக்னீசியன்களும் இணைந்து ஒவ்வொரு பிரேமாக செதுக்கியிருக்கிறார்கள். இவைற்றையெல்லாம் ஒளிப்பதிவாளர் சித்தார்த் தனது கேமராக் கண்ணில் மிக இயல்பாக பதிவு செய்து நம் கண்களில் உலவ விட்டிருக்கிறார்.

நேர்த்தியான ஒளிப்பதிவு. நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு கார்த்திக்கின் இசை மயிலிறகாய் வருடிக் கொடுக்கிறது. ‘நிலா... நிலா...’ பாடல் முணுமுணுக்கும் ரகம். தேவையான இடத்தில் இவரின் பின்னணி இசை நம்மை மிரள வைக்கிறது. "உன்னக் கொல்லப் போறேன்..." பாடல் இனிமையாக இருப்பினும், அது கதையோட்டத்தின் வேகத்தை தடை செய்கிறது.

சு.வெங்கடேசனின் வசனம் சில இடங்களில் கூர் திட்டப்பட்ட வைரமாய் மின்னுகிறது. உதாரணத்திற்கு ‘கனவிலிருந்துதான் காவல் பிறக்கிறது’ என்ற வசனமும், ‘சாகாத மனுஷன் யாராவது இருந்தா காட்டுங்க... நீங்க சொல்றபடி நான் கல்யாணம் பண்ணிக்கறேன்’ போன்ற வசனங்களை சொல்லலாம். இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து, அதை நேர்த்தியாக இயக்கிய வசந்தபாலனுக்கு நிச்சயம் விருது கொடுத்தே பாராட்டலாம்.

இவரின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. சில காட்சிகள் ஹாலிவுட் படங்களை நினைவு படுத்தினாலும் தமிழ் மணம் மாறாமல், நம்மை பழைய காலத்திற்கே கூட்டிச் சென்று அம்மக்களோடு உலவிய திருப்தியை அரவான் தருகிறான். அரவான் - அசத்துவான்..!

மீண்டும் விஜய்க்கு தம்பியாக ஜெய்

விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் அவரது தம்பியாக நடிக்க இருக்கிறார் நடிகர் ஜெய். ஜெய் முதன்முதலில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தது விஜய்யின் பகவதி படத்தில் தான்.

அந்த படத்தில் விஜய் தம்பியாக நடித்தார். அதன்பிறகு சென்னை-28, கோவா என்று பல படங்களில் நடித்து படிப்படியாக உயர்ந்து, இப்போது ஹீரோவாக உயர்ந்து இருக்கிறார்.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது ஜெய்க்கு.

அதுவும் விஜய்யின் தம்பி கேரக்டர் வேடத்திற்கு. ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் என பெரிய கூட்டணி படம் என்பதால் ஜெய்யும் மறுக்காமல் உடன் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

வசந்தபாலன் படத்தில் கார்த்தி...?

அரவான் படத்தை தொடர்ந்து வசந்தபாலன் அடுத்து இயக்க போகும் படத்தில் பருத்திவீரன் கார்த்தி நடிக்க போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

இதுநாள் வரை கமர்ஷியலாக நடித்து வந்த கார்த்திக்கு, இப்போது சிரீயஸ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறதாம்.

ஆனால் தனக்கு ஏற்றபடி யார் கதை தருவார் என்று யோசித்த போது அவர் நினைவில் தோன்றியவர் வசந்தபாலன் தானாம்.

உடனே அவரை சந்தித்து உங்க கம்பினேஷனில் எனக்கு ஒரு படம் பண்ணுங்க என்றாராம்.

அதுவும் உங்க ஸ்டைலி‌லேயே இருக்கட்டும், எனக்காக ‌எதையும் மாற்றாதீங்க என்று கோரிக்கையும் வைத்தாராம்.

இந்த பேச்சுவார்த்தையில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், அநேகமாக வசந்தபாலனின் அடுத்த படத்தில் கார்த்தி நடிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...