சுந்தர பாண்டியன் - சினிமா விமர்சனம்

இதுநாள்வரை நட்பு, நண்பர்களின் காதலுக்கு உதவி, அதற்காக அடிதடி, அடாவடி ஆகிய கதையம்சம் கொண்ட படங்களிலேயே கவனம் செலுத்தி வந்த சசிகுமார், முதன்முதலாக காந்தார காதலனாக களம் இறங்கி கலக்கி இருக்கும் கலர்புல் படம்தான் "சுந்தரபாண்டியன்".

மதுரை, தேனிபக்கம் குறிப்பிட்ட சமூகத்தை ‌சார்ந்த பெரிய இடத்துப்பிள்ளை நாயகர் சுந்தரபாண்டியன் எனும் சசிகுமார். நண்பனின் காதலுக்கு உதவப்போய் இவரே நாயகி அர்ச்சனா அலைஸ் லெஷ்மி மேனனின் மனம் கவர்ந்தவராகிறார். அப்புறம்? அப்புறமென்ன? அர்ச்சனா அலைஸ் லெஷ்மியின் காதலன், முறைமாமன், அம்மணி அர்ச்சனா கல்லூரிக்கு போகும் வரும் வழிகளில் முறைக்கும் மாமன்கள்...

எல்லோரும் மனதளவில் விரோதியாகப்போகும் சுந்தரபாண்டியனை, எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட இருந்தே குரல்வளை அறுக்க பார்க்கின்றனர். ஆனால் அவர்க‌ள் அத்தனை பேரையும் நண்பர்களாகவே பார்க்கும் சுந்தரபாண்டியன், தன் காதல் திருமணத்திற்கு முதல்நாள் புகட்டும் பாடம் தான் "சுந்தரபாண்டியன்" மொத்தபடமும்!

இப்படி ஒரு காதலுக்கும் - நட்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த அழகிய கதையை எத்தனைக்கு எத்தனை அற்புதமாக தந்திருக்கிறார் இப்படத்தின் அறிமுக இயக்குநரும், சசிகுமாரின் உதவி இயக்குநருமான எஸ்.ஆர்.பிரபாகரன் என்பது தான் இப்படத்தின் பெரியபலம்!

ரஜினி ரசிகர் சுந்தரபாண்டியனாக சசிகுமார், பேருந்தில் அலப்பறை பண்ணுபவர்களை அடக்கும் ஒரு சில காட்சிகளும், பில்-டப் ப்ளாஷ் போக்குகளும்‌ போதும் அவரது இயல்பான எடுப்பான நடிப்பிற்கு கட்டியம் கூறுவதற்கு! மனிதர் என்னமாய் நடித்திருக்கிறார்?!

சசியின் நடிப்பையும் துடிப்பையும் பார்த்து நாயகி அர்ச்சனா எனும் லெட்சுமி மேனனுக்கு மட்டுமல்ல... பொதுவான தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சசிகுமார் மீது இனம்புரியா காதல் வருவதுதான் சுந்தரபாண்டியனின் வெற்றி!

க்ளைமாக்ஸில் நல்ல நட்பிற்கு விளக்கம் அளிக்கும் காட்சிகளில் சுந்தரபாண்டியன் சசிகுமாரையும் மீறி, இயக்குநர் பிரபாகரனும் அவரது வசனங்களும் ஸ்கீரினில் தெரிவது சசிகுமாருக்கும், சுந்தரபாண்டியனுக்கும் கிடைத்திருக்கும் பெரிய வெற்றி ‌என்றால் மிகையல்ல!

கதாநாயகி அர்ச்சனாவாக அறிமுகமாகியிருக்கும் லெட்சுமி மேனன், தமிழ்சினிமாவில் தற்போது நிலவும் குடும்ப பாங்கான கதாநாயகியர் பற்றாக்குறையை பக்காவாக நிரப்புவார் என நம்பலாம்! அம்மணி காதல் காட்சிகளிலும் சரி, கல்தா கொடுக்கும் காட்சிகளிலும் சரி, அவ்வளவு ஏன்?

அப்பாவின் ஒப்புதலுக்காக கண்ணீர் மல்க நிற்கும் காட்சிகளிலும் கூட தன் இயல்பான திமிரான நடிப்பால் படத்தை மேலும் ஒருபடி மேலே தூக்கி பிடித்திருக்கிறார் பலே! பலே!

சசிகுமார் - லெஷ்மி மேனன் ஜோடி மாதிரியே ஆரம்ப காதலன் அறிவழகனாக வரும் இனிகோ பிரபாகரன், முறைபையன் ஜெகனாக வரும் விஜய் சேதுபதி, எல்லோருக்கும் சீனியர் புவனேஷ்வரன் ‌எனும் குட்டையனாக வலம் வந்து, பாதியிலேயே பரிதாபகரமான முடிவை தேடிக் கொள்ளும் அப்புக்குட்டி, நண்பன் முருகேசனாக வரும் பரோட்டா சூரி, பரஞ்ஜோதி - செளந்தர ராஜா, அப்பா கேரக்டர்கள் நரேன், தென்னவன், அம்மா கேரக்டர்கள் துளசி, சுஜாதா, தோழி நீது நீலாம்பரன் உள்ளிட்ட எல்லோரும் சம்பந்தப்பட்ட பாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பது படத்தின் பெரும்பலம்!

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் நான்கு மட்டுமல்ல, பின்னணி இசையும் சுகராகம்! சி.பிரேம் குமாரின் ஒளிப்பதிவு, வி.டான்போஸ்கோவின் படத்தொகுப்பு, திலிப் சுப்பராயனின் சண்டை பயிற்சி, தினேஷின் நடனம் உள்ளிட்டவைகளும் படத்தின் பெரும் பலம்! இவையெல்லாவற்றையும் விட ‌எஸ்.ஆர்.பிரபாகரனின் எழுத்தும்-இயக்கமும், எம்.சசிகுமாரின் நடிப்பும், தயாரிப்பும் சுந்தரபாண்டியனின் முன்பாதியை காமெடியாகவும், பின்பாதியை கருத்து நெடியாகவும் சீன் பை சீன் தூக்கி நிறுத்தி இருக்கின்றனர் பேஷ் பேஷ்!

ஆக மொத்தத்தில் குறை என்று பெரிதாக எதுவும் சொல்ல முடியாத "சுந்தரபாண்டியன் - சூப்பர்பாண்டியன்!"

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...