விஸ்வரூபம் - நாளை தியேட்டர்களில்,இன்று தெருக்களில்


நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர் கமல் எழுதி இயக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கான எதிர்ப்பு ஆரம்பம் முதலே கடுமையாக இருந்துவரும் நிலையில்,தடை பல கடந்து நாளை(பிப்-7ம் தேதி) வரப்போகிறது என்ற நிலையில் தெருத்தெருவாக விஸ்வரூபம் திரைப்பட சிடியை பத்து ரூபாய்க்கும்,ஐந்து ரூபாய்க்கும் விற்றுக்கொண்டிருக்கின்றனர்.

இதில் என்ன வேடிக்கை என்னவென்றால் சென்சார் செய்யப்படாத சி.டி.,என்று வேறு சொல்லி கொடுக்கின்றனர். சி.டி.,கொடுப்பவர்கள் பணத்தை குறிவைத்து கொடுக்கவில்லை, இது பலருக்கும் போய்ச்சேரவேண்டும் தியேட்டருக்கு வருபவர்கள் கூட்டத்தை குறைக்கவேண்டும் என்பதே நோக்கமாக இருந்துள்ளது

இந்த படம் வெளியாவது தள்ளிப்போகும் ஒவ்வொரு நாளும் நான் ஒரு சொத்தை இழந்துகொண்டிருக்கிறேன் என்று கமல் உருக்கமாக சொன்னபிறகும் கூட திரைப்படம் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக செயல்பட்ட குழு அப்படியே திரைப்படம் வெளிவந்தாலும் அது ஒடக்கூடாது என்பதற்காக இந்த மட்டமான காரியங்களில் இறங்கியுள்ளனரா என்பதில் சந்தேகம் உள்ளது

பவர்ஸ்டார் நடித்துள்ள கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வெளிவந்து பல நாளான பிறகும் வெளிவந்துள்ள சி.டி.,யை பிடித்ததாக இரண்டு நாளாக போலீசார் செய்தி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.,ஆனால் கண்எதிரே இன்னும் வெளிவராத விஸ்வரூபம் பட சி.டி., சூரையிடுவது போல விநியோகிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வளவையும் தாண்டி தியேட்டர்களில் படம் ஒடுவது என்பது இறைவனின் கையில்தான் உள்ளது,கமல் பாணியில் சொல்வதானால் இயற்கையின் கையில் உள்ளது.

அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கை நிர்மூலமாக்கும் பயங்கர வெடிகுண்டை, வெடிக்கவிடாமல் தடுக்க ,உயிரை பணயம்வைத்து போராடும் வீர,தீரமிக்க இந்தியனின் கதைதான் விஸ்வரூபம். கதையும்,கதை சொல்லும் பாணியும் மிக ஹைடெக்காக இருக்கிறது. 

ஆனால் கமல் ரசிகர்களுக்கே ஒரு முறைபார்த்தால் படம் புரியாது என்பது மட்டும் உண்மை. அதே நேரம் கதக் நடன கலைஞராக கமல் வரும்காட்சி,எதிரிகள் முகாமில் நடத்தும் சண்டைக்காட்சி ஆகிய இரண்டு காட்சிகளுக்காக மட்டுமே கமல் ரசிகர்கள் இந்த படத்தை பல முறை பார்ப்பார்கள்

கதைக்களம்,நடிகர்கள் தேர்வு,மேக்கப்,லொக்கேஷன்,இசை,கேமிரா என்று ஒவ்வொரு காட்சியிலும் கடுமையாக உழைத்துள்ள கமல் கதையை எளிமையாகவும்,கோர்வையாகவும் சொல்லத் தவறிவிட்டார்.

நியூகிளியர் சிஸ்டம் புரிந்தால்தான் படம் புரியும் ஆனால் படம் பார்ப்பவர்கள் ஒரு சதவீதம் பேருக்காவது இந்த நியூகிளியர் பற்றி புரியுமா என்பது சந்தேகமே.

படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை குண்டு வெடித்துக்கொண்டே இருக்கிறது.,இதற்குதான் அதிகம் செலவானதோ

படத்தில் ஆன்ட்ரியா ஒரு வசனம் பேசுவார், இங்கே எல்லாமே டபுள் ரோல்தான் என்று அதென்னவோ நிஜம்தான் படம் முடிந்தபிறகுகூட படத்தில் கமல் கேரக்டர் என்ன என்பது புரியாமலே உள்ளது.

ஆனால் ஒன்று நிச்சயம், நாலு பைட்,எட்டு காமெடி,இரண்டு டான்ஸ் என்று பொழுதுபோக்கு வரிசையில் இடம் பெறும் படங்கள் வரிசையில் இந்த படத்தை நிறுத்திப்பார்க்க முடியாது,கூடாது.

ஹாலிவுட் தரத்தில் அல்ல ஹாலிவுட் படமாகவே எடுத்து இருக்கிறார்.வித்தியாசமான படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம் .

இறுதியாகவும்,உறுதியாகவும் ஒரு வேண்டுகோள் இந்த படத்தை பார்ப்பவர்கள் தயவுசெய்து தியேட்டரில்தான் போய் பார்ப்பேன் என்று முடிவு செய்துகொள்ளுங்கள்,அது கமல் போன்ற வித்தியாசமான கலைஞனுக்கு செய்யும் உதவி மட்டுமல்ல உலகத்தரத்திற்கு தமிழ் படம் போவதற்கும் செய்யக்கூடிய உதவியாகும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...