சூது கவ்வும் - சினிமா விமர்சனம்



காதல் பிரச்சினையில் வேலை பார்க்கும் இடத்தில் கைகலப்பாகி வேலை இழந்த ஒருவன், விலையுயர்ந்த சொகுசு காரை ஓட்டவேண்டும் என்ற ஆசையில், பைவ் ஸ்டார் ஓட்டல் வேலையை தொலைத்த மற்றொருவன், நயன்தாராவுக்கு கோயில் கட்டி, பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கி சென்னைக்கு வரும் இன்னொருவன் ஆகிய மூவரும் ஒரே அறையில் நண்பர்களாக தங்கியிருக்கிறார்கள். 

மறுமுனையில் சிறு சிறு கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கும் விஜய் சேதுபதி, பெரிய இடத்தில் கை வைக்கக்கூடாது, மிரட்டக்கூடாது, மாட்டிக்கொண்டால் அடிபணிந்துவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 விதிமுறைகளின்படி கடத்தல் வேலைகளை செய்துவருகிறார். இவருக்கு அவ்வப்போது ஐடியா சொல்பவராக, ‘மாமா மாமா’ என்று ஒரு நிழல் உருவமாக வலம் வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. 

வேலையை இழந்த மூன்று நண்பர்களும் ஒருநாள் பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கும், இன்னொரு கும்பலுக்கும் தகராறு வருகிறது. இந்த தகராறில் நண்பர்கள் கூட்டமும் தாக்கப்பட, அங்கிருந்து தப்பித்து விஜய் சேதுபதியிடம் சேர்ந்து வெளியேறுகிறார்கள். 

மூவரையும் தன்னுடைய இடத்துக்கு அழைத்துச் செல்லும் விஜய் சேதுபதி, தன்னுடைய கடத்தல் வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்த முடிவெடுக்கிறார். இதற்கு நண்பர்களில் இரண்டு பேர் சம்மதிக்க ஒருவன் மட்டும் பின்வாங்குகிறான். பின்னர் அவனும் வந்து இணைகிறான். மூவரும் இணைந்து சின்ன சின்ன கடத்தல் வேலைகளை செய்து பணம் சம்பாதித்து வருகிறார்கள். 

இந்நிலையில், நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கரால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர், எம்.எஸ்.பாஸ்கரின் மகனை கடத்தி அந்த பழியை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். இந்த கடத்தல் வேலைக்கு விஜய் சேதுபதி கும்பலை பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். முதலில் மறுக்கும் விஜய் சேதுபதி, பின்பு ஒத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார். 

இதன்படி, ஒருநாள் அரசியல்வாதியின் மகனை கடத்த திட்டமிடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு முன்னதாக வேறொரு கும்பல் அவனை கடத்திச் சென்றுவிடுகிறது. அவர்கள் செல்லும் இடத்தை அறிந்துகொள்ளும் விஜய் சேதுபதி கும்பல், மறுநாள் போலீஸ் உடை அணிந்து அங்கு சென்று பார்க்கின்றனர். 

அங்கு மயக்க நிலையில் தனியாக இருக்கும் அரசியல்வாதியின் மகனை தூக்கிக் கொண்டு வருகின்றனர். அவனை கடத்தியதும் அரசியல்வாதிக்கு போன் போட்டு மகனை கடத்திவிட்டதாகவும், விடவேண்டுமென்றால் 2 கோடி ரூபாய் பணம் தரவேண்டும் என்றும் மிரட்டுகிறார்கள். ஆனால், இதற்கு அடிபணியாத அரசியல்வாதி போலீஸ் உதவியை நாடுகிறார். 

இதனால் பயந்துபோன விஜய் சேதுபதி கும்பல், அவனை விட்டுவிட துணிகிறது. ஆனால், அரசியல்வாதியின் மகனோ, தன்னுடைய அப்பா மூலம் பணம் கேட்டால் கிடைக்காது. தன்னுடைய யோசனையின்படி செய்தால் பணம் கிடைக்கும். கிடைக்கும் பணத்தில் ஆளுக்கு பாதி எடுத்துக் கொள்ளலாம் என்ற நிபந்தனையின்படி பணத்தை வாங்க ஐடியா கூறுகிறான். 

அதற்கு விஜய் சேதுபதியும் ஒத்துக்கொள்கிறார். அரசியல்வாதியின் மகன் ஐடியாப்படி பணத்தையும் வாங்கி விடுகின்றனர். இறுதியில் பங்கு பிரிக்கும்போது பிரச்சினை வர, விஜய் சேதுபதி கும்பலை விபத்தில் சிக்கவைத்து அங்கிருந்து பணத்துடன் தப்பிவிடுகிறான் அரசியல்வாதியின் மகன். 

இதற்கிடையில் தன்னுடைய மகனை கடத்திய கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு சைகோ போலீஸ்காரரை நியமிக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இறுதியில், பணத்தோடு ஓடிச்சென்ற அரசியல்வாதியின் மகனிடமிருந்து விஜய் சேதுபதி கும்பல் பணத்தை வாங்கினார்களா? இந்த கடத்தல் கும்பல் போலீஸிடம் சிக்கினார்களா? என்பதே மீதிக்கதை. 

அடர்ந்த தாடி, லேசாக நரைத்த முடி என 40 வயது மதிக்கத்தக்க வயதான தோற்றத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. இவர், இதுவரை நடித்த படங்களில் நாயகியை கட்டிப் பிடித்து நடிப்பது போன்ற காட்சி இல்லாத குறையை இந்த படத்தின் மூலம் நிவர்த்தி செய்து கொண்டார்போலும். 

படத்தின் முதல் பாதி முழுவதும் அரைகுறை உடையுடன் நாயகியை மடியில் தூக்கி வைத்துக் கொண்டே சுற்றுகிறார். படத்தில் கூறும் வசனம்போல், படம் முழுக்க மனுஷன் வாழ்ந்திருக்கிறார் என்ற பொறாமையை நம்முள் ஏற்படுத்தியிருக்கிறார். படத்திற்காக கொஞ்சம் குண்டாகியிருக்கிறார். 

கடத்திவிட்டு பணம் பெறுவதற்காக இவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல், வயிறு குலுங்க சிரிக்கவும் வைக்கிறது. நண்பர்களாக வரும் மூன்று பேரும் குறும்படங்கள் மூலம் பரிச்சயமான முகம் என்றாலும், வெள்ளித்திரையில் மேலும் பளிச்சிடுகிறார்கள். மூவரின் நடிப்பும் வெகுபிரமாதம். 

இவர்களுடைய பயம் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது. எதார்த்தமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்திய மூவருக்கும் நல்ல ஒரு எதிர்காலம் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. சஞ்சிதா ஷெட்டி அழகாக இருக்கிறார். ‘மாமா மாமா’ என்று விஜய் சேதுபதியுடனேயே வலம்வந்து நம்மையும் வசீகரிக்கிறார். 

முதல்பாதி வரை படம் முழுவதும் நிரம்பியிருக்கிறார். நேர்மையான அரசியல்வாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், வெள்ளைச்சட்டை, தோளில் துண்டு, மிடுக்கான தோற்றம், மிரட்டும் தொணியில் பார்வை என நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். 

இவருடைய மகனாக நடித்திருக்கும் கருணாகரனின் திருட்டு முழிப் பார்வையும், குரூரத்தனமான இவருடைய செய்கையும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கின்றன. 

சைகோ போலீஸ் பிரம்மாவாக வரும் யோக் ஜெப்பி படத்தில் பேசாமலேயே மிரட்டுகிறார். எந்த ஒரு செயலுக்கும் முகபாவனையிலேயே தனது முடிவை சொல்லிவிடும் இவரை, கடைசியில் சிரிப்பு போலீசாக மாற்றியதுதான் ஏமாற்றம். 

முதலமைச்சராக வரும் ராதாரவி, அமைச்சரின் மனைவியாக வரும் ராதா என அனைவரும் தங்கள் நடிப்பை திறம்பட செய்திருக்கிறார்கள். 

ஒரு கடத்தல் கதையை சீரியஸாகவும், அதே நேரத்தில் காமெடியாகவும் சொல்லிய இயக்குனர் நலன் குமாராசாமிக்கு பாராட்டுக்கள். 

இந்த படத்தின் நிஜ ஹீரோவே திரைக்கதைதான். யூகிக்க முடியாத கதை, கதாபாத்திரங்கள் போக்கை எல்லா இடத்திலும் என்ஜாய் செய்யமுடியும் என்பதை திரைக்கதை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். 

அதேபோல், படத்தில் கேரக்டருக்கு தகுந்தாற்போல் அவர்களது பெயரையும் தேர்வு செய்திருப்பது இயக்குனரின் திறமையை காட்டுகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமே வசனங்கள்தான். விஜய் சேதுபதியின் 5 விதிமுறைகள், கடத்திய பிறகு பெற்றோரிடம் பணத்தை பெறுவதற்காக பேசும் வசனங்கள் எல்லாம் ரசிக்கவைக்க கூடியவை. 

மேலும், ‘கடத்தல் வேலைக்கு குருட்டுத்தனமான முட்டாள் தனம் வேண்டும், முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேண்டும்’ என்பது போன்ற அறிவார்த்தமான வசனங்களும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. 

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் சந்தோஷ் நாராயணனின் இசை. பாடல்களும், பிண்ணனி இசையும் படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. அந்த அளவுக்கு கலகலப்பூட்டும் இசை. 

ஒளிப்பதிவாளர் தினேஷும் தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார். 

மொத்தத்தில் ‘சூது கவ்வும்’ நிச்சயம் வெல்லும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...