இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

சட்டத்துறை அமைச்சர் சட்டக்கல்லூரியில் தனக்கு 30 சீட்டுகள் ஒதுக்கித் தரவேண்டும் என அக்கல்லூரி முதல்வரிடம் முறையிடுகிறார். ஆனால், கல்லூரி முதல்வரோ அவருக்கு சீட் ஒதுக்கித் தரமுடியாது. 

ஏற்கெனவே தங்களுக்கு ஒதுக்கித் தந்த சீட்டுகளில் சேர்ந்த மாணவர்கள் எல்லாம் ரவுடிகளாக இருக்கின்றனர். இதனால், அவ்வப்போது கல்லூரியில் கலவரம் வருகிறது. அதனால் இந்த முறை தங்களுக்கு சீட் ஒதுக்கித்தர முடியாது என கூறுகிறார். 

தனக்கு சீட் தராத முதல்வருக்கு பாடம் புகட்டும்விதமாக, தனது சிபாரிசில் அக்கல்லூரியில் சேர்ந்த ஒரு மாணவன் மூலமாக அக்கல்லூரியில் கலவரம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்கிறார். 

அந்த கலவரத்தில் அப்பாவி மாணவர்கள் 3 பேர் கொல்லப்படுகின்றனர். இதை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் நாயகன் விக்ரம் பிரபு இதற்கு காரணமானவர்களை பழிவாங்க வேண்டும் என துடிக்கிறான். 

இந்நிலையில், ஜெயிலில் இருக்கும் தனது தம்பி வம்சி கிருஷ்ணாவை சட்டத்துறை மந்திரி தனது பரிந்துரையின் பேரில் பரோலில் வெளிக்கொண்டு வருகிறார். வெளியில் வரும் வம்சி கிருஷ்ணாவை விக்ரம் பிரபு கடத்தி விடுகிறார். இதையடுத்து தன் தம்பியை கடத்தியவர்கள் யார் என்று மந்திரி தேடிக் கொண்டிருக்கிறார். 

இதற்கிடையில் பரோலில் வெளியே வந்த வம்சி கிருஷ்ணாவின் பரோல் முடிந்துவிட, அவரைத் தேடி போலீஸ் சட்டத்துறை மந்திரியிடம் செல்கிறது. வம்சி கிருஷ்ணா அங்கு இல்லாததால் மந்திரியை கைது செய்து ஜெயிலில் அடைக்கின்றனர். 

இதனால் மந்திரியின் பதவியும் போய்விடுகிறது. மந்திரியை பழிவாங்கும் தன்னுடைய எண்ணம் நிறைவேறிவிட, கடத்திய மந்திரியின் தம்பியை விடுவித்துவிடுகிறார் விக்ரம் பிரபு. 

இதற்கிடையில், பஸ்ஸில் நாயகி சுரபியிடம் விக்ரம் பிரபு செய்யும் சிறுசிறு குறும்புகள் சுரபியை அவர் மீது காதல்கொள்ள வைக்கிறது. ஆனாலும் தன் காதலை நாயகனிடம் வெளிப்படுத்தாமலேயே இருக்கிறார். 

இந்நிலையில் தன்னை யார் கடத்தியது என்பது தெரியாத வம்சி கிருஷ்ணா, கடத்தியவனை எப்படியாவது கண்டுபிடித்து கொன்றுவிட வேண்டும் என முடிவெடுக்கிறான். இதனால், விக்ரம் பிரபுவை தேடி அலைகிறான். 

இறுதியில், வில்லன் நாயகனை கண்டுபிடித்து அவனை பழிவாங்கினானா? நாயகி தன் காதலை விக்ரம் பிரபுவிடம் வெளிப்படுத்தி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை. 

நாயகன் விக்ரம் பிரபு, ‘கும்கி’ படத்தில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞனாக வருகிறார். லுங்கியில் பார்த்த இவரை மாடர்ன் உடையில் பார்க்கும்போது அழகாக இருக்கிறார். ஆனால், நடிப்பில்தான் மிளிரவில்லை. ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறார். 

நாயகி சுரபி பாலிவுட்டில் இருந்து இறக்குமதியானாலும், நம்ம ஊர் பெண் போலவே இருக்கிறார். நாயகனிடம் வம்பு இழுக்கும் காட்சியில் அழகாக நடித்து இருக்கிறார். மற்றபடி நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெருகேற வேண்டும். 

கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் இயக்குனர் எம்.சரவணன் கோட்டைவிட்டிருக்கிறார். குறிப்பாக, நாயகியின் அம்மாவாக வருபவர் நாயகிக்கு அக்கா போன்று இருககிறார். 

இதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கணேஷ் வெங்கட்ராம் கதாபாத்திரத்தை வீணடித்திருக்கிறார்கள். அமைச்சர் கதாபாத்திரமும் சரியான தேர்வாக இல்லை. 

மாபெரும் வெற்றி கொடுத்த இயக்குனர் இயக்கிய படமாக இது தெரியவில்லை. கதைக்கு தேவையில்லாத காட்சிகளை ஆங்காங்கே நுழைத்து சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நாயகியைத் தேடி நாயகன் அலையும் போது ஏற்படும் விபத்து காட்சிகளை அழகாக எடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தவில்லை. 

சக்தியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் எடுத்த விதம் அருமை. விபத்து காட்சிகளை படமாக்கிய விதம் அழகு. கிளைமாக்ஸ் காட்சியை எடிட்டிங் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சத்யா இசையில் ஒன்றிரண்டு பாடல்கள்தான் கேட்கும்படி இருக்கிறது. மற்றவை சுமார் ரகம்தான். பின்னணி இசை பரவாயில்லை. 

மொத்தத்தில் ‘இவன் வேற மாதிரி’ ஒரு மாதிரிதான்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...