போலீஸ் ஸ்டோரி(ஹாலிவுட்) - சினிமா விமர்சனம்


தங்கையின் மரணத்துக்கு பழி வாங்கும், ஒரு அண்ணனின் கதையை, த்ரில்லராக தர முயற்சி செய்திருக்கிறார் ஜாக்கி சான். ஆனால், இந்த, போலீஸ் ஸ்டோரியில், அதிக சாகசங்கள் இல்லை. 

கேப்டன் ஜான் (ஜாக்கி சான்), கடமை காரணமாக, மருத்துவமனையில் இருந்த மனைவியைக் காப்பாற்ற முடியாமல் இழக்கிறார். 

அதனால், தன் ஒரே மகளின் வெறுப்புக்கு ஆளாகிறார். மதுக்கூடம் (பார்) நடத்தும் வூவோடு, அவர் மகளுக்கு காதல் ஏற்படுகிறது. வூ, நல்லவனல்ல என்கிற ஜாங்கின் பேச்சை, அவள் கேட்க மறுக்கிறாள்.

வூ, தந்திரமாக, ஜாங்கை தன் விடுதிக்கு வரவழைக்கிறான். அவரை பிணைக்கைதியாக்கி, சிறையில் இருக்கும் குற்றவாளி நிஷாலோவை விடுவிக்க கோருகிறான். 

ஆனால், அவன் நோக்கம் வேறு. தன் தங்கையின் மரணத்திற்கு காரணமான நிஷோலாவை பழி வாங்கவே, இந்தக் கடத்தல் நாடகத்தை அவன் அரங்கேற்றுகிறான். கேப்டன் ஜாங், அவன் திட்டங்களை முறியடித்து, தன் மகளையும், நிஷாலோவையும் காப்பாற்றினாரா? என்பதை, பரபரப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் டிங் ஷெங். 

தன் வயதிற்கேற்ற பாத்திரத்தில் ஜாக்கி ஜொலிக்கிறார். ஒரு பாசத் தகப்பனாக அட்டகாச நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆனாலும், அவரது காமெடி சண்டைகளை ரசித்துப் பார்க்கும் கூட்டம், இந்த அவதாரத்தில் அவரை ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகமே. 

ஜாக்கியைத் தவிர, எல்லாருமே தட்டையான சீன புதுமுகங்கள் என்பதால், ரசிகர்களுக்கு சலிப்பு தட்டுகிறது. காட்சிகளுடன் ஒன்ற முடியவில்லை என்பது நிஜம். தங்கைப் பாசம், தந்தை பாசம் என்று தடம் மாறியதால், வழக்கமான ஜாக்கி சான் படம் போல், சுவாரஸ்யமாக இல்லை. நகைச்சுவை, மருந்துக்கு கூட இல்லை என்பது கூடுதல் மைனஸ். 

அதிரடி சண்டை படங்களில் நடிக்க மாட்டேன் என்று ஒதுங்கப்போகும் ஜாக்கி, தன் கடைசி சாகசப் படத்தில், அதிக பட்சம் அவரது பிராண்ட் காமெடி கைகலப்பை காட்டியிருப்பார் என்று நம்பிப் போனால், ஏமாற்றம் தான் ஏற்படும்.

மொத்தத்தில், ''போலீஸ் ஸ்டோரி - போலி ஸ்டோரி!''

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...